கொரோனா : விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி!

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் பிஃப்ஸர், ஜெர்மனியின் பயோஎன்டெக் இணைந்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.

இந்த எம்ஆர்என்ஏ தடுப்பூசி 95 சதவிகித அளவுக்குப் பயனுள்ளதாக உள்ளது என பிஃப்ஸர், பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்தன. அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்த தடுப்பூசி, 94.5 சதவிகித செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி கேட்டு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் தர நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) விண்ணப்பித்திருந்தது பிஃப்ஸர். இந்நிலையில், பிஃப்ஸரின் கொரோனா தடுப்பு மருந்தை அனுமதிக்கலாமா என்பது குறித்து எஃப்.டி.ஏ டிசம்பர் 10ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.

அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டமான, ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ இன் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் மோன்செஃப் ஸ்லாவி, “இந்த தடுப்பூசியை விநியோகிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டிசம்பர் நடுப்பகுதியில் ஒப்புதல் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்ததும், 24 மணிநேரத்திற்குள் நோய்த் தடுப்புத் தளங்களுக்குத் தடுப்பூசிகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிஃப்ஸர் நிறுவனத்திடம் பிரிட்டன் அரசு 40 மில்லியன் டோஸ் ஆர்டர் செய்து முதல்கட்டமாக 10 மில்லியன் டோஸை கேட்டுள்ளது. இதனை 5 மில்லியன் மக்களுக்கு வழங்கவுள்ளது.

மற்றொரு மருந்து நிறுவனமான மாடர்னாவும் எப்.டி.ஏ.விடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், தடுப்பூசியின் ஒரு டோஸ் 1,854 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,744 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பன்செல் கூறியுள்ளார். தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதைப் பொறுத்து விலை நிர்ணயம் இருக்கும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தடுப்பூசி வழங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து இந்தியாவுக்கு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதி விலையில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொது மக்களுக்குத் தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 ரூபாய் வரை கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இம்மருந்து ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் என்று சீரம் சிஇஓ அதார் புனாவாலா தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாதி விலையில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read More

நான் முதல் பெண்தான்- கடைசி பெண் அல்ல : வெற்றி குறித்து கமலா ஹாரிஸ் உரை

அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியத் தமிழ் மற்றும் கருப்பினப் பூர்வீகம் கொண்டவரான கமலா ஹாரிஸ் தமது உரையைத் தொடங்கும்போது இப்படிக் குறிப்பிட்டார்:

“ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் லூயிஸ் இறப்பதற்கு முன்பு எழுதினார். அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது உத்தரவாதம் செய்யப்பட்டது அல்ல. ஜனநாயகத்துக்காகப் போராடுவதற்கு நாம் எந்த அளவுக்கு விரும்புகிறோமோ அந்த அளவுக்கே அது வலுவாக இருக்கும் என்பதே அவர் சொன்னதன் பொருள்”

“இதில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இருக்கிறது. சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு சக்தி இருக்கிறது” என்று பேசிய கமலா ஹாரிஸ், 2020 தேர்தலுக்கான பைடனின் முழக்கமான “அமெரிக்காவுக்கு நீங்கள் புதிய நாளைத் தொடங்கினீர்கள்” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டு அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

மேலும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கமலா ஹாரிஸ், “நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன். கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க நாட்டு மக்களுக்கு நன்றி. ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல; அது செயல்; நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே, தனது வெற்றிக்கு காரணம். கடந்த நான்கு ஆண்டுகளாக சமத்துவம் மற்றும் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராடி வந்தோம்.

நூறாண்டுகளில் போராடிய அனைத்து பெண்களையும் நினைவு கூறுகிறேன். கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறைக்கு உதாரணம். பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம், உண்மைக்கு வாக்களித்துள்ளீர்கள். யாருக்கு வாக்களித்திருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன். துணை அதிபராகியுள்ள முதல் பெண்ணாக நான் இருக்கலாம்; ஆனால் நான் கடைசி பெண்ணல்ல.

நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன.வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி.” இவ்வாறு கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.

Read More

ஐபிஎல் : பெங்களூருவை வீழ்த்தி 4-வது இடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத்

பெங்களூரு அணியுடனான நேற்றைய (அக்டோபர் 31) ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த 52ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூரு அணியை ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மிரட்டினார். தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் (5 ரன்கள்) கேப்டன் விராட் கோலி (7 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் (24 ரன்கள்) ஏமாற்றினார். பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபடி இருந்தது. இதனால், அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 120 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து 121 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவிட் வார்னர் 8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விருத்திமான் சஹா 39 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேவின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தாலும், 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவரும் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த கனே வில்லியம்சன் (8 ரன்கள்), அபிஷேக் சர்மா (8 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியாக ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ஹோல்டர்(26 ரன்கள்) மற்றும் அப்துல் சமத் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Read More

இந்தியாவில் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை

இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பப்ஜி நிறுவனம் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது அதன் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் அடிமையாக்கிய விளையாட்டு பப்ஜி. குறிப்பாக இளைஞர்கள் எந்நேரமும் இரவு பகல் பார்க்காமல் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடந்தனர்.

உலகம் முழுவதும் 60 கோடி முறைகளுக்கும் மேல் பப்ஜி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கோடி பேர் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 3.3 கோடி பேர் பப்ஜி பயனர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, பப்ஜி ஆட்டத்தின் மூலம் அந்நிறுவனத்துக்கு 22,457 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதனிடையே,  கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியச் சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில்,  100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பப்ஜி என்பது தென்கொரிய வீடியோ கேம் நிறுவனமான ப்ளூ ஹோலுக்கு சொந்தமானது. ஆனால் இதற்கான பதிப்புரிமை சீனாவின் டென்சென்ட்  கேமிங் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பப்ஜி மொபைல் தனது முகநூல் பக்கத்தில், இன்று முதல் இந்தியாவில் பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் ஆகிய சேவைகள் முழுவதுமாக தடை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செப்டம்பர் 2 ஆம் தேதி உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். எங்கள் தனியுரிமைக் கொள்கை படி அனைத்து பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. எங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதற்கு மிகவும் வருந்துகிறோம். இந்தியாவில் பப்ஜி மொபைல் ஆப்பிற்கு அளித்து வந்த ஆதரவிற்கு நன்றி என பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை  இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்டதை அப்டேட் செய்ய முடியாது. ஆனால் தற்போது முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டதன் மூலம், ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டதையும் இனி விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தாமதமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ்…

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். இதையடுத்து படத்தை பார்க்க சூர்யா ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இந்நிலையில் இந்த மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலை நேற்று முன்தினம் அமேசான் பிரைமியில் வெளியிட்டார்கள். அதில் சூரரைப் போற்று படம் இல்லை. இதையடுத்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் சூரரைப் போற்று பட ரிலீஸ் தாமதம் குறித்து சூர்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் ஆகாசம் பாடல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் சூர்யா கூறியிருப்பதாவது,

“சூரரை போற்று திரைப்படம் ஆரம்பிக்கும் போது சில சவால்கள் இருக்கும் என நினைத்தோம். இந்தப் படம் விமானப்படை பற்றியது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே நாங்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி, அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது.

இந்திய விமானப் படையின் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது. தற்போது புதிதாகச் சில தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டியுள்ளது. ஆனால், பெருந்தொற்று காலத்தில் தேசத்தின் முன்னுரிமை வெவ்வேறு விஷயங்களின் மீது குவிந்துள்ளதால் நாங்கள் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

சூரரைப் போற்று நம் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்திருக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதற்காக எவ்வளவு காத்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதனை நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From us to you, an ode to never-ending support and friendship https://t.co/5KuqtOfX7J#SooraraiPottruOnPrime@primevideoin #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD@rajsekarpandian pic.twitter.com/c447emLnyf
— Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2020

படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் தயாராகி வரும் நிலையில், மாறாவின் உலகம் பற்றிய வீடியோ இதோ. விரைவில் ட்ரெய்லர் உள்ளிட்டவற்றுடன் உங்களை சந்திக்கிறோம். நம் நட்பு, அன்பு, பாசத்திற்காக ப்ரெண்ட்ஷிப் பாடல் உங்களுக்காக என்று தெரிவித்துள்ளார்.

Read More