இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி…

இந்தியா vs இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 329/10 ரன்கள் குவித்தது.

அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்ட நிலையில் இந்திய அணி 285/10 ரன்கள் எடுத்து, 482 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. கடின இலக்கை நோக்கி பயணித்த இங்கிலாந்து அணி 164/10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் கடைசி ஓவரில் பென் ஃபோக்ஸ் 2 (9) ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 33 (84) களத்தில் இருந்த நிலையில் முதல் செஷன் நிறைவடைந்தது. அடுத்துக் களமிறங்கிய ஒல்லி ஸ்டோன் வெறும் 5 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு டக்-அவுட் ஆனார்.

மறுமுனையில் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 33 (92) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பௌலர்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் பந்துவீசினர். இருப்பினும், குல்தீப் யாதவ் வீசிய 51ஆவது ஓவரில் மொயின் அலி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

தொடர்ந்து ரன் மழை பொழிந்த அவர், 18 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்ததால் போட்டி முடிவுக்கு வந்தது. அறிமுக வீரர் அக்ஷர் படேல் கடைசி இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்திய அணிக்காக அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.

விவி குமார், தோஷி, ஹிர்வானி, அமித் மிஸ்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் முதல் ஆறு இடங்களில் உள்ளனர். முதல் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் இரண்டாவது போட்டியை இந்தியா கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடைபெறும்.

Read More

ஓடிடியில் மாஸ்டர் படம்-திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி!

திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 -ம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில் ஜன.29-ம் தேதி மாஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுவரை திரைக்கு வந்து 3 மாதங்களுக்கு பின்னர் மட்டுமே படங்கள் ஓடிடி அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தன. சமீபமாக அந்த நிலை மாறி வருகிறது. குறைந்தபட்சம் திரையிலிருந்து படம் வெளியேறிய பின்னர் ஓடிடிக்கும் தொலைக்காட்சிக்கும் கொடுக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் பேசி வருகின்றனர்.

படம் வெளியாகி 15 நாட்களுக்குள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியிட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வரும் இந்த பிரச்னையை சமாளிப்பது எப்படி என திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு வரை நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தபோதும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரிக்கை வைத்து மாஸ்டரை திரைக்கு வர வைத்தனர்.

எனினும் அமேசான் தரப்பில் மாஸ்டர் படத் தயாரிப்பாளருக்கு அளித்த பெரும் தொகை காரணமாகவே 16 நாள்களில் ஓடிடியில் வெளியிடுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களின் வருத்தங்களுக்குத் தற்போதைக்குத் தீர்வு எதுவும் இல்லை.

Read More

வரலாறு படைத்த இந்திய அணி – தொடரை வென்று சாதனை : 32 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பனில் மண்ணைக்கவ்விய ஆஸி.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பனில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது.

ரிஷப் பந்த் 138 பந்துகளில் 9 பவுண்டரிஅக்ள் 1 சிக்சருடன் போர் வீரனான நின்று வெற்றியை கைப்பற்ற உதவினார்.ஆட்ட நாயகனானார் ரிஷப் பந்த்.

ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃபில் பவுண்டரிக்கு விரட்டி வெற்றி பெற்ற அந்தக் காட்சியை இந்திய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள், அணியினரும் மறக்க முடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு அந்தக் காட்சி துர்க்கனவுதான்.

இந்திய அணி கவாஸ்கர் பார்டர் டிராபியை 2-1 என்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.கடந்த முறை 2-1 என்று தொடரை விராட் கோலி தலைமையில் கைப்பற்றிய போது வார்னர், இல்லை, ஸ்மித் இல்லை என்றெல்லாம் கூறி இந்த முறை இந்தியா கடினம் அது இது ஆச்சா போச்சா என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் இன்னாள் வீரர்களும் ஊடகங்களும் கொக்கரித்தன.

அதற்கேற்றார்போல் 36 ரன்களுக்கு அடிலெய்டில் ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியபோது இந்திய அணியை ஊற்றியே மூடி விட்டனர். ஆனால் மெல்போர்னில் ரஹானேவின் அபாரமான சதம், பும்ரா, அஸ்வின், சிராஜ், பந்து வீச்சு என்று அபார வெற்றியைப் பெற்றது தொடரை சமன் செய்தது.

சிட்னியில் 406 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ரிஷப் பந்த், புஜாரா மிரட்டினர், பிறகு இவர்கள் ஆட்டமிழந்த பிறகு ரவி அஸ்வின், விஹாரி 259 பந்துகள் ஆடி 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லை, அஸ்வின் இல்லை, சைனி காயம் ஆனால் சிராஜ், தாக்குர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் அசத்த ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்களுக்கும் சுருட்டியது, சிராஜ் 5 விக்கெட்டுகளையும் ஷர்துல் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் ஷர்துல், வாஷிங்டன் சுந்தர் 186/6 லிருந்து 336 ரன்கள் எடுக்க உதவினர். இது மிக முக்கியமான திருப்பு முனை.

இன்று 328 ரன்கள் இலக்கை எதிர்த்து ஷுப்மன் கில் பிரமாதமான 91 ரன்களை எடுக்க புஜாரா 56 ரன்களை எடுத்தார், ஆனால் கடைசியில் கிரைம் திரில்லர் படம் போல் சென்ற மேட்சில் சுந்தர் திடீரென கமின்ஸை ஹூக் சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க ஆட்டம் மாறியது, ரிஷப் பந்த் அதன் பிறகு புகுந்தார். கடைசியில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் நெருக்கடியில் ஆட்டமிழக்க சிறிய திருப்பு முனை ஏற்பட்டது, ஆனால் ரிஷப் பந்த் போர் வீரனாக கடைசியில் ஹேசில்வுட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார்.

ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மட்டுமே அச்சுறுத்தலாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க் கதை இதோடு முடிந்தது. டிம் பெய்ன், ரிஷப் பந்த் 16 ரன்களில் இருந்த போது ஸ்டம்பிங்கை விட்டார், மோசமான கீப்பிங்கில் பை ரன்கள் கொடுத்தார். அவர் கேப்டன்சியும் மிகவும் தற்காப்பு உத்தியாக இருந்ததே தவிர வழக்கமான ஆஸ்திரேலிய ஆக்ரோஷம் இல்லை.

Read More

டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 6-ந் தேதியன்று நடைபெற்றது. அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர்.

துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய வன்செயல்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. கண்டனங்கள் குவிந்தன.

இதனிடையே தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கு உள்ள கணக்குகளை காலவரையின்றி முடக்க, பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: 

அதிபர் பதவிக்கு புதிதாக தேர்வான ஜோ பைடனிடம், அதிகாரத்தை அமைதியாக ஒப்படைக்காமல், அதனை தடுப்பதற்கான பணிகளை செய்ய, தனது எஞ்சிய பதவி காலத்தை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். கேப்பிடோல் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்காமல், மன்னிக்க, தனது பேஸ்புக் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்தியது, அமெரிக்கா மற்றும் உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் நேற்று அகற்றினோம். அவரது பதிவுகளும், நோக்கமும், மேலும் வன்முறையை தூண்டும் என நாங்கள் நம்புகிறோம். பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அடுத்து வரும் 13 நாட்கள் மற்றும் பதவியேற்பு விழா அமைதியாக நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக, எங்களது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, எங்கள் தளத்தை பயன்படுத்த அனுமதி அளித்திருந்தோம். சில நேரங்களில், எங்களது கொள்கைகளை மீறும் போது அவரது பதிவுகளை நீக்கி இருக்கிறோம். மீறப்படும் பதிவுகள் குறித்து குறியிட்டு காட்டியுள்ளோம். அரசியல் பேச்சு, சர்ச்சைக்குரிய பேச்சாக இருந்தாலும், அவற்றை அணுக பொது மக்களுக்கு உரிமை உண்டு என நம்புவதால், இதனை செய்தோம். ஆனால், தற்போதைய சூழல் அடிப்படையிலேயே மாறுபட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறை, கிளர்ச்சியை தூண்டுவதற்கு எங்கள் தளத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

இந்த காலகட்டத்தில், அதிபரை தொடர்ந்து, எங்கள் சேவையை பயன்படுத்த அனுமதித்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதனால், அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் காவலவரையின்றி முடக்குகிறோம். அல்லது, அதிகாரம் மாற்றம் அமைதியாக நிறைவடையும் வரை குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது தடை தொடரும். இவ்வாறு ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்களுக்காக டிரம்ப் வெளியிட்ட வீடியோவையும் பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் நீக்கியுள்ளன. தேர்தல் முடிவுகளை சந்தேகம் தெரிவிக்கும் வகையிலும், தனது ஆதரவாளர்களை பாராட்டும் வகையில் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளையும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் நீக்கியுள்ளன.

Read More

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் வட கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகர சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் மாவட்டம் மே. மாத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 21 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Facebook Page