கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குத்தேரசு பேசியதாவது:- பருவநிலை மாற்றம், கொரோனா ஆகியவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டினி பிரச்சினையை உருவாக்கின. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
உக்ரைன் போர், அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா நாடுகளில் வேளாண் பணிகளுக்கு தேவையான உரம், எரிசக்தி ஆகியவற்றின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதனால் அறுவடை பாதிக்கப்பட்டு, இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் உணவு பஞ்சம் மேலும் மோசமடையும். உணவு கிடைக்காமல் , உணவுப் பொருட்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும். இது உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் பொருளாதார பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது. இந்நிலையில், உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும். ஏழை நாடுகள் மீண்டுவர கடன் நிவாரணம் அளிக்கலாம். உலக உணவு சந்தையை பலப்படுத்த தனியார் துறையினரும் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.