இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

துவக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, சமீரா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்து கவனமாக ஆடினர். சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

 கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளை சந்தித்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார்.  சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் விளாசினார்.

ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை ருசித்தது.

90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 36 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது

மோசமான பேட்டிங்கிற்கு உதாரணம். அதிலும் கடைசி 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை புவனேஷ்வர்குமார்தான் வீழ்த்தினார். 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு இலங்கையின் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சாரித் அசலங்கா 44 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்களும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், தீபக் சாஹர் 2 விக்கெட்களும், குருணல் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக்பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.