கேப்டவுன்: விராட் கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு வாமிகாவின் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டபோது, ​​அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் முகம் மறைக்கப்பட்டிருந்தது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது காதலியும்,  பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு கோலி – அனுஷ்கா தம்பதி வாமிகா என பெயரிட்டது. வாமிகாவின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்த அனுஷ்கா சர்மா குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை.

எங்கள் குழந்தைக்கு தனியுரிமையை வழங்கவும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்கவுமே அவரது முகத்தை வெளியிடவில்லை என அனுஷ்கா சர்மா கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது வாமிகாவின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அரைசதம் அடித்த கோலி, தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாலாட்டு சைகை செய்தார்.

அப்போது பெவிலியனில் இருந்த அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகாவுடன் இணைந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார். அப்போது தான் வாமிகாவின் முகத்தை ரசிகர்கள் முதன்முதலில் பார்த்தனர்.