ஜானி டெப் மீண்டும் பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன் படத்தில் நடிக்க டிஸ்னி நிறுவனம் அவரை அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார்.

இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.

மன்னிப்புக் கடிதம் கொடுத்த டிஸ்னி?

இப்போது ஜானி டெப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில் அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அதில் முதல் கட்டமான ‘பைரேட்ஸ் ஆஃப் கரேபியன்-6’ படத்தில் அவரை மீண்டும் நடிக்க டிஸ்னி நிறுவனம் அழைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

மேலும் டிஸ்னி நிறுவனம், அவருக்கு அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளதாகவும், சம்பளமாக 301 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2500 கோடி ரூபாய்) தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜானி டெப் இதற்கு முன்பு “இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால் கூட ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படியாகினும் மீண்டும் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் ஜானி டெப் நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.