ஜூன் 30-ந்தேதிக்கு பிறகு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ வினியோகம் செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது.பிளாஸ்டிக் பைகளானவை எளிதில் மட்கும் தன்மை அற்றவை. ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். 

இந்தநிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘2021 ஆகஸ்டு மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

உதாரணமாக பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும். இவை தவிர, பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பி.வி.சி. பேனர்கள் ஆகியவையும் அடங்கும்.

அதனால், ஜூலை 1-ந் தேதிக்கு முன்னர் வணிகர்கள் இந்த பொருட்களின் இருப்பை பூஜியம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஜூன் 30-ந்தேதிக்கு பிறகு மேற்கண்ட பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ வினியோகம் செய்தாலோ சோதனை செய்யும்போது பிடிபட்டால் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.