பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடைபெற்றது. உடனடியாக பட்டிண்டா ராணுவ முகாமின் அதிரடி தாக்குதல் குழுக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அடையாளம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ராணுவ முகாம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாமின் அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்குப் பின்னரே மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராணுவ முகாமில் நடந்தது தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டிண்டா சீனியர் எஸ்.பி. குரானா கூறுகையில், “பஞ்சாப் காவல்துறை பட்டிண்டா ராணுவ முகாமுக்கு வெளியில் தயார் நிலையில் நிற்கிறது. ஆனால் ராணுவத் தரப்பில் உள்ளே நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை” என்றார்.