குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் ஆக இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளதால், அந்நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
10 போட்டியாளர்களுடன் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இன்னும் 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது மைம் கோபி, விசித்ரா, சிருஷ்டி டாங்கே, சிவாங்கி, ஆண்ட்ரியன் ஆகிய 5 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்கள் 5 பேருக்கு இடையே தான் இந்த வாரம் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் டுவிஸ்ட் ஆக 2 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்கி நடுவர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அந்த இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர் யார் என்பதும் தற்போது வெளியாகியுள்ள புரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல கலை இயக்குனர் கிரண் எண்ட்ரி கொடுத்துள்ளார். முதலில் இயக்குனர் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் உதவி கலை இயக்குனராக பணியாற்றிய கிரண், பின்னர் தமிழில் மயக்கம் என்ன, கோ, இரண்டாம் உலகம், அநேகன், நானும் ரெளடி தான், பீஸ்ட் என ஏராளமான படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதுதவிர ஒரு சில படங்களில் நடிகராகவும் கலக்கி உள்ள கிரண் தற்போது தன் சமையல் திறமையை காண்பிக்க குக் வித் கோமாளியில் களமிறங்கி உள்ளார்.
மற்றொரு வைல்டு கார்டு போட்டியாளர் கஜேஷ். இவர் புகழ்பெற்ற காமெடி ஜாம்பவான் நாகேஷின் பேரன் ஆவார். நடிகர் ஆனந்த் பாபுவின் மகனான இவர், இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு குக் ஆக களமிறங்கி உள்ளார். இந்த 2 வைல்டு கார்டு போட்டியாளர்களின் எண்ட்ரியால் மற்ற 5 போட்டியாளர்களும் கதிகலங்கிப் போய் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் ரித்திகா, முத்துக்குமார் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.