நடிகர் விஜய் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில், 9 ஆண்டுகளுக்குப்பிறகு மனுவின் மீதான தீர்ப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி, ரியல் ஹீரோக்களாக இருக்கவேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கடுமையாக சாடியதோடு, நடிகர் விஜய்யின் வரி விலக்குமனுவை தள்ளுபடி செய்தார். அதோடு,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டார். 

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. தீர்ப்பு வெளியாகி சில தினங்கள் ஆன நிலையில், தனது மனு மீதான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, நடிகர் விஜய்  கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபாரதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன் மீதான விமர்சனங்களை தீர்ப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று விஜய் தனது மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தனி நீதிபதியின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற அமர்வு தீர்ப்பு தரும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் தீர்ப்பை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இன்று மனு விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில், தான் நுழைவு வரி கட்டுவதாக நடிகர் விஜய் உறுதியளித்துள்ளார். மேலும், தனி நீதிபதி விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் மீதான விமர்சனங்களை நீக்குவது தொடர்பான விசாரணை நான்கு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.