இந்தியா உள்ளிட்ட சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபியர்கள் சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கோவிட் வைரஸின் புதிய வகைகளை தடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 2020 மார்ச் மாதத்திற்குப் பின்னர் கடந்த மே மாதம்தான் சவுதி குடிமக்கள் அனுமதியின்றி வெளி நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விதிகளை மீறியுள்ளனர். தற்போது உருமாறிய கொரேனா வைரஸ் அச்சுறுத்தலாக இருப்பதால் கொரோனா சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேரடியாகவோ, வேறு நாடுகள் வழியாகவோ குறிப்பட்ட நாடுகளுக்குச் சென்றிந்தால், ங்கிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லக் கூடாது. அப்படி பயணித்து திரும்பினால் சட்ட நடவடிக்கை மற்றும் கடுமையான அபாரதம் விதிக்கப்படும். அத்துடன், 3 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவானது இந்தியா, எத்தியோப்பியா, அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில், 2020ஆம் ஆண்டு தினசரி நான்கு ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஜனவரியில் அது நூறாக குறைந்தது. தற்போது இரண்டாம் அலையில் மீண்டும் நோய் பாதிப்பு ஆயிரங்களில் பதிவாகி வருகிறது. அதன்படி செவ்வாய் கிழமை 1,379 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.59 கோடியை தாண்டியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,59,31,275 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 76 லட்சத்து 27 ஆயிரத்து 996 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 41 லட்சத்து 92 ஆயிரத்து 199 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,41,11,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள், 85,673 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.