வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் சிட்டகாங் நகருக்கு அருகே உள்ள பிஎம் ரசாயன கன்டெய்னர் சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. பின்னர் கன்டெய்னர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீ மளமளவென பரவி உள்ளது.

சிட்டகாங் மாவட்டத்தின் வெளியே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கு ஆகும். இந்த சேமிப்புக் கிடங்கு மே 2011 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சேமிப்புக் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்பட இரசாயணங்கள் இருந்தது. இதில் 600 பேர் பணியாற்றி வந்தனர். 

இராசயண அதிர்வினை காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பரவியது. தீ விபத்து நேற்று இரவு 9 மணிக்கு ஏற்பட்டது. இதை அடுத்து நள்ளிரவு வேளையில் வெடி விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பர துவங்கியது.

இதுகுறித்து சட்டகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சிஎம்சிஎச்) புறக்காவல் நிலைய துணை ஆய்வாளர் நூருல் ஆலம் கூறும்போது, “பிஎம் கன்டெய்னர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் 19 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ஒரு கன்டெய்னரிலிருந்து மற்றொரு கன்டெய்னருக்கு தீ மளமளவென பரவி உள்ளது. போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உட்பட 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 350 பேர் சிஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ராணுவ மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார்.

இதுகுறித்து சட்டகிராம் மண்டலஆணையர் அஷ்ரப் உதின் கூறும்போது, “தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 560 டாலர்(50 ஆயிரம் டாகா), காயமடைந் தவர்களுக்கு தலா 224 டாலர் (20 ஆயிரம் டாகா) வழங்கப்படும்” என்றார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.