பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 14வது முறையாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வென்றார்.

பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தனது டென்னிஸ் அகாடமியில் பயிற்சி எடுத்த 23 வயது வீரரான நார்வேவை சேர்ந்த கேஸ்பர் ருத்துடன் நடால் மோதினார். தொடக்கம் முதலே நடால் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, கேஸ்பரை நிலை குலைய வைத்தார்.

முதல் செட்டை நடால் 6க்கு3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் கேஸ்பர் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் வேலைக்கு ஆகவில்லை. 2வது செட்டையும் 6க்கு3 என்ற கணக்கில் நடால் தனதாக்கினார்.

இதனைத் தொடர்ந்த நடைபெற்ற மூன்றாவது செட்டில் நடால், தனது ஆக்கோரஷமான ஆட்டத்தை வெளிப்படத்தி, ஒரு கேம்மை கூட கேஸ்பரால் வெல்ல முடியவில்லை. இதனையடுத்து 2 மணி நேரம் 18 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6க்கு3, 6க்கு3, 6க்கு0 என்ற நேர் செட் கணக்கில் நடால் வென்றார்.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று நடால் உலக சாதனை படைத்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபனில் இதுவரை அவர் 112 போட்டிகளில் வென்று 3 மட்டும் தோற்று இருக்கிறார். ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோர் 20 கிராண்ட் ஸ்லாம்களை வென்ற நிலையில், நடால் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் இருக்கிறார். வெற்றி பெற்ற நடாலுக்கு 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற வயதான வீரர், நடப்பு ஆண்டில் தொடர்ந்து 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற பெருமையையும் நடால் படைத்தார்.