ஆப்கானிஸ்தானில் ஒரு தொலைக்காட்சியில் நெறியாளராகப் பணிபுரிந்தவர் தற்போது சாலையில் சமோசா விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களில் பல ஊடகவியலாளர்கள், குறிப்பாகப் பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஊடகங்கள் மீதும் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனால் சொந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என எண்ணத்துக்கு ஆப்கானியர்களே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கபீர் ஹக்மால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில், “மூசா முகமது என்பவர் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தியாளராக, நெறியாளராகப் பணியாற்றியவர்.

அவருக்குத் தற்போது சரியான வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பின் காரணமாக அவர், தெருக்களில் ஏதேனும் உணவுப் பண்டங்களை விற்று பிழைப்பு நடத்துகிறார். குடியரசு ஆட்சி வீழ்ந்த பிறகு ஆப்கன் மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

மூசா முகமதுவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.