அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 6-ந் தேதியன்று நடைபெற்றது. அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர்.
துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய வன்செயல்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. கண்டனங்கள் குவிந்தன.
இதனிடையே தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கு உள்ள கணக்குகளை காலவரையின்றி முடக்க, பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
அதிபர் பதவிக்கு புதிதாக தேர்வான ஜோ பைடனிடம், அதிகாரத்தை அமைதியாக ஒப்படைக்காமல், அதனை தடுப்பதற்கான பணிகளை செய்ய, தனது எஞ்சிய பதவி காலத்தை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். கேப்பிடோல் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்காமல், மன்னிக்க, தனது பேஸ்புக் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்தியது, அமெரிக்கா மற்றும் உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் நேற்று அகற்றினோம். அவரது பதிவுகளும், நோக்கமும், மேலும் வன்முறையை தூண்டும் என நாங்கள் நம்புகிறோம். பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அடுத்து வரும் 13 நாட்கள் மற்றும் பதவியேற்பு விழா அமைதியாக நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக, எங்களது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, எங்கள் தளத்தை பயன்படுத்த அனுமதி அளித்திருந்தோம். சில நேரங்களில், எங்களது கொள்கைகளை மீறும் போது அவரது பதிவுகளை நீக்கி இருக்கிறோம். மீறப்படும் பதிவுகள் குறித்து குறியிட்டு காட்டியுள்ளோம். அரசியல் பேச்சு, சர்ச்சைக்குரிய பேச்சாக இருந்தாலும், அவற்றை அணுக பொது மக்களுக்கு உரிமை உண்டு என நம்புவதால், இதனை செய்தோம். ஆனால், தற்போதைய சூழல் அடிப்படையிலேயே மாறுபட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறை, கிளர்ச்சியை தூண்டுவதற்கு எங்கள் தளத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்த காலகட்டத்தில், அதிபரை தொடர்ந்து, எங்கள் சேவையை பயன்படுத்த அனுமதித்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதனால், அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் காவலவரையின்றி முடக்குகிறோம். அல்லது, அதிகாரம் மாற்றம் அமைதியாக நிறைவடையும் வரை குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது தடை தொடரும். இவ்வாறு ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்களுக்காக டிரம்ப் வெளியிட்ட வீடியோவையும் பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் நீக்கியுள்ளன. தேர்தல் முடிவுகளை சந்தேகம் தெரிவிக்கும் வகையிலும், தனது ஆதரவாளர்களை பாராட்டும் வகையில் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளையும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் நீக்கியுள்ளன.
0 Comments