வால்வு வைத்த N-95 ரக முககவசங்கள் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில்லை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
உயிர்க் கொல்லி நோயான கொரோனாவிற்கு இதுவரை மருந்த கண்டுபிடிக்காத நிலையில், நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள மருத்துவர்கள் தேர்வு செய்து மக்களுக்கு அளித்துதான் முகக்கவசம். இதனை தொடர்ந்து அனைத்துத் தரப்பினரும் முகக்கவசங்களை அணிய தொடங்கினர்.

அதிலும் பெரும்பாலனவர்கள் தேர்வு செய்தது N-95 முகக் கவசங்களை தான். பார்ப்பதற்கு அழகானதாகவும், மிகவும் பாதுகாப்பானது என கருதப்பட்டதாலும் N-95 முகக் கவசங்களை பலரும் தேர்வு செய்தனர். விலை அதிகமாக இருந்தாலும் பலரின் தேர்வு N-95 முகக் கவசங்களாகவே இருந்தன.
ஆனால் வால்வ் வைத்த N-95 ரக மாஸ்க்குகள் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என்று மத்திய அரசு. தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் வால்வுடன் கூடிய முகக்கவங்களை பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளது. இவற்றை சுகாதார பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு N-95 முகக் கவசங்கள் தீங்கு விளைவிப்பதாக உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
N-95 முகக் கவசங்களில் பொருத்தப்பட்ட வால்வுகளின் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் சாதாரண துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவது சிறந்தது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளவர்கள் வால்வுடன் கூடிய N-95 முகக் கவசங்களை அணியும் போது, அவர்களிடம் இருந்து தொற்று எளிதாக வால்வு மூலமாக வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வால்வுகள் அல்லாத N-95 வகை முகக்கவசங்களை பயன்படுத்தலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் துணியிலான முகக்கவசங்களை அன்றாடம் தூய்மைப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் துணியை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைத்து, நன்றாக காய வைக்க வேண்டும் என்றும், நீரில் உப்பு கலப்பது மேலும் சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குடும்பத்தில் உள்ள யாரும் முகக்கவசங்களை பகிர்ந்துக்கொள்ள கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 Comments