ஐபிஎல் : பெங்களூருவை வீழ்த்தி 4-வது இடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத்

by | Nov 1, 2020 | விளையாட்டு | 0 comments

பெங்களூரு அணியுடனான நேற்றைய (அக்டோபர் 31) ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த 52ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூரு அணியை ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மிரட்டினார். தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் (5 ரன்கள்) கேப்டன் விராட் கோலி (7 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் (24 ரன்கள்) ஏமாற்றினார். பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபடி இருந்தது. இதனால், அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 120 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து 121 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவிட் வார்னர் 8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விருத்திமான் சஹா 39 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேவின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தாலும், 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவரும் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த கனே வில்லியம்சன் (8 ரன்கள்), அபிஷேக் சர்மா (8 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியாக ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ஹோல்டர்(26 ரன்கள்) மற்றும் அப்துல் சமத் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This