8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

by | Dec 29, 2020 | விளையாட்டு | 0 comments

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இதனைத்தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. 12-வது சதத்தை அடித்த கேப்டன் அஜிங்யா ரஹானே 112 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 57 ரன்களுடனும், அடுத்து வந்து வீரர்கள் குறைவான ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது 
பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் (4 ரன்) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் பிடிபட்டார். அடுத்து மேத்யூ வேட்டும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஸ்கோர் 42 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் (28 ரன்) அஸ்வின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் ஸ்டீவன் சுமித் (0) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக செயல்பட்ட மேத்யூ வேட் (40 ரன், 137 பந்து, 3 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டிராவிஸ் ஹெட் (17 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (1 ரன்) ஆகியோரும் சீக்கிரம் வீழ்ந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 99 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 66 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 2 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது. 

அதைதொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், கம்மின்ஸ் 15 ரன்னுடனும் களத்தில் இறங்கினர். இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் இந்த ஜோடியில் பேட் கம்மின்ஸ் 22 ரன்களும், சிறப்பாக ஆடிய கேமரூன் கீரின் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நாதன் லைன் 3 ரன்னும், ஹேசில் வுட் 10 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 103.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 69 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறக்கினர். இதில் மயங்க் அகர்வால் 5 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் சுப்மன் கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 15.5 ஒவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதன்படி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.  

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This