சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் பேருந்து சேவைகள் தொடங்கியது. பொதுமக்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கிய நிலையில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நான்காம்கட்ட ஊரடங்கு தளர்வை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 1ஆம் தேதி முதல், மாவட்டத்திற்கு உள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து பணிமனைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தல்,  பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

பேருந்துகள் தயாரான நிலையில் இன்று முதல் மாவட்ட எல்லைகளுக்குள் இயக்கப்பட உள்ளன. சென்னையைப் பொறுத்தவரை 33 பணிமனைகளில் 3,300 மாநகரப் பேருந்துகள் பயணிகளின் வருகைக்கு ஏற்ப இன்று முதல் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் 22 முதல் 24 பயணிகள் மட்டுமே  அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர அனுமதிக்கப்படுவர்.

பேருந்துகளில் பின்பக்கமாக ஏறி முன்பக்கமாக இறங்க வேண்டும் என்றும், ஏறும்போது படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்து கொள்வது அவசியம். பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். அணியாதவர்கள் பேருந்துகளில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுபோன்று பேருந்துகளிலிருந்து எச்சில் துப்புவதற்கு அனுமதி இல்லை என்றும் பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் பணியைத் தொடங்குவதற்கு முன் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதுபோன்று இவர்கள் கைகளில் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்துதான் பணியில் ஈடுபட வேண்டும். பேருந்துகள் பணிமனைகளிலிருந்து புறப்படும் போதும் இரவில் மீண்டும் வந்து நிறுத்தும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இ-பாஸ் நடைமுறை இன்றி பயணிக்கலாம், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 100 சதவிகித ஊழியர்களுடன் இயங்கலாம், மால்கள் திறக்கலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் பேருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன . அதேநேரத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும். எனவே இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.