வரலாறு படைத்த இந்திய அணி – தொடரை வென்று சாதனை : 32 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பனில் மண்ணைக்கவ்விய ஆஸி.

by | Jan 19, 2021 | விளையாட்டு | 0 comments

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பனில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது.

ரிஷப் பந்த் 138 பந்துகளில் 9 பவுண்டரிஅக்ள் 1 சிக்சருடன் போர் வீரனான நின்று வெற்றியை கைப்பற்ற உதவினார்.ஆட்ட நாயகனானார் ரிஷப் பந்த்.

ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃபில் பவுண்டரிக்கு விரட்டி வெற்றி பெற்ற அந்தக் காட்சியை இந்திய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள், அணியினரும் மறக்க முடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு அந்தக் காட்சி துர்க்கனவுதான்.

இந்திய அணி கவாஸ்கர் பார்டர் டிராபியை 2-1 என்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.கடந்த முறை 2-1 என்று தொடரை விராட் கோலி தலைமையில் கைப்பற்றிய போது வார்னர், இல்லை, ஸ்மித் இல்லை என்றெல்லாம் கூறி இந்த முறை இந்தியா கடினம் அது இது ஆச்சா போச்சா என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் இன்னாள் வீரர்களும் ஊடகங்களும் கொக்கரித்தன.

அதற்கேற்றார்போல் 36 ரன்களுக்கு அடிலெய்டில் ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியபோது இந்திய அணியை ஊற்றியே மூடி விட்டனர். ஆனால் மெல்போர்னில் ரஹானேவின் அபாரமான சதம், பும்ரா, அஸ்வின், சிராஜ், பந்து வீச்சு என்று அபார வெற்றியைப் பெற்றது தொடரை சமன் செய்தது.

சிட்னியில் 406 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ரிஷப் பந்த், புஜாரா மிரட்டினர், பிறகு இவர்கள் ஆட்டமிழந்த பிறகு ரவி அஸ்வின், விஹாரி 259 பந்துகள் ஆடி 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லை, அஸ்வின் இல்லை, சைனி காயம் ஆனால் சிராஜ், தாக்குர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் அசத்த ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்களுக்கும் சுருட்டியது, சிராஜ் 5 விக்கெட்டுகளையும் ஷர்துல் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் ஷர்துல், வாஷிங்டன் சுந்தர் 186/6 லிருந்து 336 ரன்கள் எடுக்க உதவினர். இது மிக முக்கியமான திருப்பு முனை.

இன்று 328 ரன்கள் இலக்கை எதிர்த்து ஷுப்மன் கில் பிரமாதமான 91 ரன்களை எடுக்க புஜாரா 56 ரன்களை எடுத்தார், ஆனால் கடைசியில் கிரைம் திரில்லர் படம் போல் சென்ற மேட்சில் சுந்தர் திடீரென கமின்ஸை ஹூக் சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க ஆட்டம் மாறியது, ரிஷப் பந்த் அதன் பிறகு புகுந்தார். கடைசியில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் நெருக்கடியில் ஆட்டமிழக்க சிறிய திருப்பு முனை ஏற்பட்டது, ஆனால் ரிஷப் பந்த் போர் வீரனாக கடைசியில் ஹேசில்வுட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார்.

ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மட்டுமே அச்சுறுத்தலாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க் கதை இதோடு முடிந்தது. டிம் பெய்ன், ரிஷப் பந்த் 16 ரன்களில் இருந்த போது ஸ்டம்பிங்கை விட்டார், மோசமான கீப்பிங்கில் பை ரன்கள் கொடுத்தார். அவர் கேப்டன்சியும் மிகவும் தற்காப்பு உத்தியாக இருந்ததே தவிர வழக்கமான ஆஸ்திரேலிய ஆக்ரோஷம் இல்லை.

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This