முதல்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 40 ஆயிரத்தை தாண்டியது!

by | Jul 20, 2020 | இந்தியா | 0 comments

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 681 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தொற்று, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,18,043 ஆகவும், மரணம் 27,497 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 61.61 சதவீதமாக உள்ளதாகவும், தற்போது வரை 7 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில், தமிழகம், டில்லி, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.

மஹாராஷ்டிராவில், நேற்று, ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா உறுதியானது. அங்கு, ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாவது இது முதல்முறையாகும். இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,10,455 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில், 1038 பேரும், புனேயில் 1,800 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அமைச்சர்கள் ஜிதேந்திரா அவத், அசோக் சவான், தனஞ்செய் முன்டே, காங்கிரஸ் தலைவர் அஸ்லாம் ஷேக் உள்ளிட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 4,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் மட்டும் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உ.பி.,யில் 49,650 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தலைநகர் லக்னோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லக்னோவிற்கு அடுத்து கான்பூரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் 23,999 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கவுகாத்தியில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நள்ளிரவுடன் அமலுக்கு வந்தது.

கர்நாடகாவில், புதிய உச்சமாக நேற்று 4,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63, 772 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்தது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,156 பேருக்கு தொற்று உறுதியானது.

கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில், 821 பேருக்கு தொற்று உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தில், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பீஹார், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஹிமாச்சல பிரதேசம், மற்றும் உத்தர்காண்ட் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில், கொரோனாவினால், ஏற்படும் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 2.49 சதவீதமாக உள்ளதாகவும், உலகில் மிகக்குறைந்த இறப்பு வகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், நேற்று மட்டும் 63, 872 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது ஜான் ஹோப்கின்ஸ் பல்கலை தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Facebook Page

Related Posts

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

Share This