சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். இதையடுத்து படத்தை பார்க்க சூர்யா ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இந்நிலையில் இந்த மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலை நேற்று முன்தினம் அமேசான் பிரைமியில் வெளியிட்டார்கள். அதில் சூரரைப் போற்று படம் இல்லை. இதையடுத்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் சூரரைப் போற்று பட ரிலீஸ் தாமதம் குறித்து சூர்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் ஆகாசம் பாடல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் சூர்யா கூறியிருப்பதாவது,

“சூரரை போற்று திரைப்படம் ஆரம்பிக்கும் போது சில சவால்கள் இருக்கும் என நினைத்தோம். இந்தப் படம் விமானப்படை பற்றியது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே நாங்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி, அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது.

இந்திய விமானப் படையின் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது. தற்போது புதிதாகச் சில தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டியுள்ளது. ஆனால், பெருந்தொற்று காலத்தில் தேசத்தின் முன்னுரிமை வெவ்வேறு விஷயங்களின் மீது குவிந்துள்ளதால் நாங்கள் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

சூரரைப் போற்று நம் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்திருக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதற்காக எவ்வளவு காத்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதனை நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் தயாராகி வரும் நிலையில், மாறாவின் உலகம் பற்றிய வீடியோ இதோ. விரைவில் ட்ரெய்லர் உள்ளிட்டவற்றுடன் உங்களை சந்திக்கிறோம். நம் நட்பு, அன்பு, பாசத்திற்காக ப்ரெண்ட்ஷிப் பாடல் உங்களுக்காக என்று தெரிவித்துள்ளார்.