கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் பிஃப்ஸர், ஜெர்மனியின் பயோஎன்டெக் இணைந்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.
இந்த எம்ஆர்என்ஏ தடுப்பூசி 95 சதவிகித அளவுக்குப் பயனுள்ளதாக உள்ளது என பிஃப்ஸர், பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்தன. அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்த தடுப்பூசி, 94.5 சதவிகித செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி கேட்டு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் தர நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) விண்ணப்பித்திருந்தது பிஃப்ஸர். இந்நிலையில், பிஃப்ஸரின் கொரோனா தடுப்பு மருந்தை அனுமதிக்கலாமா என்பது குறித்து எஃப்.டி.ஏ டிசம்பர் 10ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.
அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டமான, ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ இன் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் மோன்செஃப் ஸ்லாவி, “இந்த தடுப்பூசியை விநியோகிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டிசம்பர் நடுப்பகுதியில் ஒப்புதல் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்ததும், 24 மணிநேரத்திற்குள் நோய்த் தடுப்புத் தளங்களுக்குத் தடுப்பூசிகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிஃப்ஸர் நிறுவனத்திடம் பிரிட்டன் அரசு 40 மில்லியன் டோஸ் ஆர்டர் செய்து முதல்கட்டமாக 10 மில்லியன் டோஸை கேட்டுள்ளது. இதனை 5 மில்லியன் மக்களுக்கு வழங்கவுள்ளது.

மற்றொரு மருந்து நிறுவனமான மாடர்னாவும் எப்.டி.ஏ.விடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், தடுப்பூசியின் ஒரு டோஸ் 1,854 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,744 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பன்செல் கூறியுள்ளார். தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதைப் பொறுத்து விலை நிர்ணயம் இருக்கும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தடுப்பூசி வழங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து இந்தியாவுக்கு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதி விலையில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொது மக்களுக்குத் தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 ரூபாய் வரை கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இம்மருந்து ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் என்று சீரம் சிஇஓ அதார் புனாவாலா தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாதி விலையில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments