தனது பிறந்த நாளை வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், விவசாயிகளின் பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு இன்று 39-வது பிறந்த நாளாகும். இந்தப் பிறந்த நாளை விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் திங்கள்கிழமை அளித்த பேட்டியில், “விவசாயிகள் சரியானதைக் கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று சரியான தீர்வை அளிக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கருத்திலிருந்தும் யுவராஜ் சிங் விலகி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யுவராஜ் சிங் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை:
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020
”இந்த தேசத்தின் ரத்தநாளங்கள் விவசாயிகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.
விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, விவசாயிகளுக்கும், நம்முடைய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவான தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு யோகிராஜ் சிங் மத்திய அரசை வலியுறுத்தியதோடு, எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் ஆதரவைக் காட்ட தங்கள் விருதுகளைத் திருப்பித் தரும் விளையாட்டு வீரர்களையும் ஆதரித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது ” விவசாயிகள் சரியானதைக் கோருகிறார்கள். அரசாங்கம் அவற்றைக் கேட்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் தீர்வுகளை கொண்டு வர வேண்டும் என்பது மிகவும் அவசியம். விவசாயிகள் போராட்டத்திற்காக அவர்களின் மதிப்புமிக்க விருதை திருப்பித் தரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் ஆதரிக்கிறேன், ”என்று யோகிராஜ் கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசிய பல்வேறு கருத்துக்கள் மக்களை ஆத்திரமடைய செய்வதாக இருந்தது. மேலும் அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இதனால் இணைய வாசிகள் மத்தியில் பெரும் வெறுப்பினை யுவராஜ் சிங் தந்தை சம்பாதித்தார். இதன் விளைவாக #ArrestYograjSingh என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இந்த நிலையில், யுவராஜ் சிங் இது குறித்து தனது பிறந்தநாளில் குறிப்பிட்டுள்ளதாவது, “திரு யோகிராஜ் சிங் கூறிய அறிக்கைகளால் நான் வருத்தப்படுகிறேன். அவரது கருத்துக்கள் ஒரு தனிப்பட்ட திறனில் செய்யப்பட்டுள்ளன என்பதையும் எனது சித்தாந்தங்கள் எந்த வகையிலும் அவரை போல ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வரும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் யுவராஜ் மக்களை கேட்டுக்கொண்டார்.
யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களும் (3 சதங்கள், 11 அரை சதங்கள்), 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் 14 சதங்கள், 52 அரை சதங்கள் அடங்கும். 58 டி20 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் 1,177 ரன்கள் விளாசினார். இதில் 8 அரை சதங்கள் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் 304 விக்கெட்டுகளையும் யுவராஜ் சிங் வீழ்த்தியுள்ளார்.
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் யுவராஜ் சிங் இடம் பெற்று முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதியில் ஆஸிக்கு எதிராக யுவராஜ் சிங் ஆடிய ஆட்டத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதேபோல 2007-ம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் நினைவுகூரத்தக்கது.
0 Comments