தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் வட கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகர சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் மாவட்டம் மே. மாத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 21 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments