திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 -ம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில் ஜன.29-ம் தேதி மாஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை திரைக்கு வந்து 3 மாதங்களுக்கு பின்னர் மட்டுமே படங்கள் ஓடிடி அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தன. சமீபமாக அந்த நிலை மாறி வருகிறது. குறைந்தபட்சம் திரையிலிருந்து படம் வெளியேறிய பின்னர் ஓடிடிக்கும் தொலைக்காட்சிக்கும் கொடுக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் பேசி வருகின்றனர்.

படம் வெளியாகி 15 நாட்களுக்குள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியிட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வரும் இந்த பிரச்னையை சமாளிப்பது எப்படி என திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு வரை நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தபோதும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரிக்கை வைத்து மாஸ்டரை திரைக்கு வர வைத்தனர்.
எனினும் அமேசான் தரப்பில் மாஸ்டர் படத் தயாரிப்பாளருக்கு அளித்த பெரும் தொகை காரணமாகவே 16 நாள்களில் ஓடிடியில் வெளியிடுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களின் வருத்தங்களுக்குத் தற்போதைக்குத் தீர்வு எதுவும் இல்லை.
0 Comments