பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.