இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பப்ஜி நிறுவனம் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது அதன் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் அடிமையாக்கிய விளையாட்டு பப்ஜி. குறிப்பாக இளைஞர்கள் எந்நேரமும் இரவு பகல் பார்க்காமல் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடந்தனர்.

உலகம் முழுவதும் 60 கோடி முறைகளுக்கும் மேல் பப்ஜி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கோடி பேர் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 3.3 கோடி பேர் பப்ஜி பயனர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, பப்ஜி ஆட்டத்தின் மூலம் அந்நிறுவனத்துக்கு 22,457 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதனிடையே,  கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியச் சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில்,  100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பப்ஜி என்பது தென்கொரிய வீடியோ கேம் நிறுவனமான ப்ளூ ஹோலுக்கு சொந்தமானது. ஆனால் இதற்கான பதிப்புரிமை சீனாவின் டென்சென்ட்  கேமிங் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பப்ஜி மொபைல் தனது முகநூல் பக்கத்தில், இன்று முதல் இந்தியாவில் பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் ஆகிய சேவைகள் முழுவதுமாக தடை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செப்டம்பர் 2 ஆம் தேதி உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். எங்கள் தனியுரிமைக் கொள்கை படி அனைத்து பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. எங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதற்கு மிகவும் வருந்துகிறோம். இந்தியாவில் பப்ஜி மொபைல் ஆப்பிற்கு அளித்து வந்த ஆதரவிற்கு நன்றி என பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை  இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்டதை அப்டேட் செய்ய முடியாது. ஆனால் தற்போது முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டதன் மூலம், ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டதையும் இனி விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.